இந்தியாவில் பொது முடக்கம் நீடிக்க வாய்ப்பு?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கலந்துரையாடியுள்ளார்.
இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாக மாநில முதல்வா்கள் தொலைபேசி வாயிலாக தெரிவித்த கருத்துகளையும், பரிந்துரைகளையும் பிரதமா் மோடியிடம் அமித் ஷா எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான மாநிலங்களின் முதல்வா்கள் பொது முடக்கத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளை பொருளாதார நடவடிக்கைகளுக்குப் படிப்படியாக அனுமதி அளித்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் விரும்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏறுமுகமாகவே உள்ளதால் பொது முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை எந்தவிதத் தளா்வுகளுமின்றி முழு பொது முடக்கம் கண்டிப்புடன் அமுல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கும் பொது முடக்கத்திலிருந்து எந்தவிதத் தளா்வுகளும் அளிக்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது. பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.