இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று வாக்குப்பதிவு!

இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. பா.ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் சார்பில் மீராகுமார் போட்டியிடுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் வாக் குரிமை பெற்றுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் பாராளுமன்றத்துக்கு இன்று வருவதாலும், மழைக் கால கூட்டத்தொடர் தொடங்குவதாலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பெட்டிகளும், வாக்குச்சீட்டுகளும், பிற சாதனங்களும் போய்ச்சேர்ந்து விட்டன.

இன்று(17) காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. ஓட்டுப்பதிவை தேர்தல் கமிஷனின் 33 பார்வையாளர்கள் மேற்பார்வையிடுகிறார்கள்.

எம்.பி.க்களுக்கான வாக்குச்சீட்டுகள் பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுச்சீட்டுகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

வாக்காளர்களான எம்.பி.க் களும், எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுச்சீட்டில் இடம்பெற்றிருக்கிற 2 வேட்பாளர்களில் 1, 2 என்று தங்கள் முதல் தேர்வையும், இரண்டாவது தேர்வையும் வரிசைப்படுத்தி எழுதி ஓட்டுப்போட வேண்டும்.

இதற்கான பிரத்யேக பேனாவை வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் வழங்குகிறது. ஓட்டுப்போட செல்வதற்கு முன் வாக்குச்சாவடியில் எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்களின் சொந்த பேனாக்களை அங்கிருக்கிற அலுவலர் வாங்கிக்கொண்டு விடுவார். அவர்கள் தேர்தல் கமிஷன் வழங்குகிற தொடர் எண்களைக் கொண்ட பேனாவை பெற்றுச் சென்று, ஓட்டுப்போட்டு விட்டு வந்தபின்னர், அவர்களது பேனாக் கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விடும்.

தேர்தல் கமிஷன் வழங்குகிற பிரத்யேக பேனாவில் வைலட் நிற மை பயன்படுத்தப்படுகிறது. இந்த பேனாக்களை, மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னி லிமிடெட்டில் இருந்து தேர்தல் கமிஷன் வாங்கி உள்ளது. இந்த நிறுவனம்தான் வாக்காளர்கள் கை விரலில் வைக்கிற அழியாத மையை தேர்தல் கமிஷனுக்கு வினியோகிக்கிறது.

கடந்த ஆண்டு அரியானா மாநிலத்தில் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பேனா மையினால் ஏற்பட்ட சர்ச்சையால்தான், இந்த தேர்தலில் முதல் முறையாக தேர்தல் கமிஷன் பிரத்யேக பேனாக்களை பயன் படுத்த முடிவு செய்துள்ளது.

வாக்குச்சாவடியில் வாக்காளர்களான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என கூறுகிற குறிப்புகளை கொண்ட சிறப்பு ‘போஸ்டர்’ களையும் தேர்தல் கமிஷன் இந்த தேர்தலில் முதல் முறையாக அறிமுகம் செய்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சியும் இந்த வேட்பாளருக் குத்தான் ‘முதல்’ ஓட்டு போட வேண்டும் என்று கொறடா உத்தரவு போட முடியாது.

பாராளுமன்ற வளாக வாக்குச்சாவடியில் வைக்கப்படுகிற ஓட்டுப்பெட்டிகள், வாக்குப்பதிவு முடிந்தவுடன் ‘சீல்’ வைக்கப்பட்டு அங்குள்ள அறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் வைக்கப்படும்.

இதே போன்று மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படுகிற வாக்குப்பெட்டிகளும் ஓட்டுப்பதிவு முடிந்து ‘சீல்’ வைத்து டெல்லிக்கு அனுப்பிவைக்கப்படும்.

வருகிற 20-ந் திகதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. அதே நாளில் முடிவு அறிவிக்கப்பட்டு விடும்.

இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு பாரதீய ஜனதா, அதன் கூட்டணி கட்சிகள், கூட்டணியில் இடம் பெறாத ஐக்கிய ஜனதாதளம், அ.தி. மு.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவால் 60 சதவீதத்துக்கும் மேலான ஆதரவு உள்ளதால், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

புதிய ஜனாதிபதி 25-ந் திகதி பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !