இந்தியாவின் பணக்கார பெண் எம்.பி.

டெல்லி மேல்-சபைக்கு காலியாகும் 58 இடங்களுக்கு வருகிற 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 10 எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இதில் பா.ஜனதா 8 இடங்களையும், சமாஜ்வாடி ஒரு இடத்திலும் வெற்றி பெறும். ஒரு இடத்துக்கு போட்டி நிலவும்.

இதற்கிடையே சமாஜ்வாடி கட்சியின் பாராளுமன்ற மேல்-சபை வேட்பாளராக ஜெயாபச்சன் அறிவிக்கப்பட்டார். அவர் 4-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயாபச்சன் ஏற்கனவே 2004, 2006, 2012 ஆண்டுகளில் மேல்-சபை எம்.பி.யாக சமாஜ்வாடி சார்பில் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஜெயா பச்சனுக்கு ரூ.1000 கோடி சொத்து இருப்பதாக அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்து உள்ளார்.

ஜெயாபச்சன் மற்றும் அவரது கணவர் அமிதாப் பச்சனுக்கு ரூ.460 கோடி அசையா சொத்துக்களும், ரூ.540 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு ரூ.493 கோடி சொத்துக்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அவரது சொத்து மதிப்பு 2 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் டெல்லி மேல்-சபையின் பணக்கார எம்.பி. என்ற சாதனையை ஜெயாபச்சன் படைக்கிறார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் பா.ஜனதா எம்.பி.யான ரவிச்சந்திர கிஷோர் சின்காவுக்கு ரூ.800 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர் மக்களவை எம்.பி. ஆவார்.

நகைகளின் மதிப்பு ரூ.62 கோடி என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமிதாப் பச்சன் நகை மதிப்பு ரூ.36 கோடி எனவும், ஜெயா பச்சன் நகையின் மதிப்பு ரூ.26 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் 12 சொகுசு கார்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.13 கோடியாகும். மேலும் ரூ.3.44 கோடி மற்றும் ரூ.51 லட்சத்தில் கைக்கடிகாரங்கள் உள்ளன.

நொய்டா, போபால், புனே, அகமதாபாத், லக்னோ, பிரான்சிஸ் ஆகியவற்றில் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த சொத்து மதிப்பு ரூ.1000 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !