இந்தியாவிடம் விஜய் மல்லையாவை ஒப்படைக்க பிரித்தானியா அனுமதி

வங்கிக்கடன் மோசடி உள்ளிட்ட நிதிமோசடிகள் தொடர்பான வழக்கில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவிடம் ஒப்படைக்க பிரித்தானிய உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் பல்வேறு விடயங்களை பரிசீலித்தே, இந்த முடிவை எடுத்துள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவிற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கிங் பிஷர் குழும நிறுவனங்களின் தலைவரான விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் சிக்குண்டுள்ளார்.

இதிலிருந்து தப்பித்து, லண்டனில் வசித்து வரும் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன் ஓர் அங்கமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு, வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் கடந்த வருட இறுதியில் அனுமதியளித்திருந்தது.

எனினும், நாடுகடத்தல் ஒப்பந்த நடைமுறைகளுக்கு இணங்க தலைமை நீதிபதியின் உத்தரவு உள்துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டு, அவரே இதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

அதற்கிணங்க, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கையெழுத்திட உள்துறை செயலாளர் சாஜித் ஜாவிதுக்கு 2 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே, இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு விடயங்களை பரீசிலித்து, விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதியளிப்பதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவிற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !