இந்தியர்கள் தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்கவும் – வெளியுறவு அமைச்சகம் அறிவுரை
குண்டு வெடிப்பு சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.
இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இதுவரை 253 பேர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
இலங்கை ராணுவமும், போலீஸ் படைகளும் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையும், இரவு நேர ஊரடங்கு உத்தரவும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இலங்கைக்கு பயணம் செய்வதை பாதிப்பதாக உள்ளது. எனவே அங்கு தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இலங்கைக்கு அத்தியாவசிய தேவைக்காகவும், அவசரம் கருதியும் பயணம் செய்யும் இந்தியர்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், கண்டியில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் ஹம்பன்தோட்டா, யாழ்ப்பாணம் தூதரக அதிகாரிகளை எந்த உதவிக்கும் தொடர்புகொள்ளலாம்.
இந்திய தூதரகங்களின் தொலைபேசி எண்களை இந்திய வெளியுறவுத்துறையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.