இத்தாலியின் இறப்புகள் குறைந்தன – நம்பிக்கையின் பிரகாசத்தை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவிப்பு
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இது நம்பிக்கையின் பிரகாசத்தை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று 602 ஆக அதிகரித்திருந்ததுடன் இது கடந்த நான்கு நாட்களுக்கு மிகச்சிறிய அதிகரிப்பு என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,077 ஆகவும், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 63,927 ஆகவும் அதிகரித்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,789 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அது கடந்த ஐந்து நாட்களைவிட மிகச்சிறிய உயர்வு என்றும் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லோம்பார்டியின் வடக்கு பிராந்தியத்தின் உயர்மட்ட சுகாதார அதிகாரி ஒருவர், “மிகவும் கடினமான இந்த மாதத்தில் எங்களுக்கு கிடைத்த முதல் சாதகமான நாள் இன்று” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “இது வெற்றியைப் கொண்டாடுவதற்கான நேரம் அல்ல, ஆனால் சுரங்கப்பாதையின் முடிவில் ஒளியைக் காணத் தொடங்கிவிட்டோம்” என கூறினார்.