இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு- எடப்பாடி பழனிசாமி
பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என கூறுவது கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் கருத்துக் கணிப்புகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. அதிமுக மாநில கட்சிதான், தேசிய கட்சி அல்ல. எனவே, தமிழகத்தை பொருத்தவரை மட்டுமே என்னால் கருத்து கணிப்பு பற்றி சொல்ல முடியும், தேசிய அளவில் சொல்ல முடியாது
2016 தேர்தலில் நான் தோல்வி அடைவேன் என கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் நான் வெற்றி பெற்றேன். சேலத்தில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.
எனவே, யார் வெற்றி பெறுவார்கள் என்பது 23ம் தேதி தெரியும். பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.
விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது. மக்களின் நன்மைக்காகவே புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன. வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கம் தேவைப்படுகிறது. விபத்துக்களை தவிர்க்க இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப சாலைகள் போடப்படுகின்றன. வெறும் 7 சதவீத விவசாயிகள் மட்டுமே சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.