இதய சுத்தியுடன் அழைத்தால் ஜனாதிபதியுடன் பேசத் தயார்: மாவை சேனாதிராஜா

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி இதயசுத்தியுடன் சிந்தித்து தமிழர் தரப்புடன் பேச விரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுடன் பேசத் தயாராக இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தல் முடிவின் பின்னர் அரசியல் நிலைமைகள் எவ்வாறு உள்ளன என்பது அனைவருக்கும் தெரிகின்றது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக் ஷ தென்னிலங்கை சிங்கள மக்களின் முழுமையான ஆதரவுடன் ஜனாதிபதியாகிவிட்டார். தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு இல்லாது தான் வெற்றி பெற்றதாகவும் அவரே கூறியுள்ளார். அவ்வாறு இருக்கையில் இந்த நிலைமைகள் இனவாத அரசியல் செயற்பாடுகள் ரீதியில் இடம்பெறக்கூடாது என்பதே தொடர்ச்சியாக எமது கோரிக்கையாக உள்ளது. அதேபோல் தான் தமிழ் முஸ்லிம் மக்களுடன் இணைந்து பயணிக்க விரும்புகின்றேன் என ஜனாதிபதி கூறியுள்ள காரணியை நாம் வரவேற்கிறோம். அவர் கூறியது உண்மையென்றால் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கம் ஜனாதிபதிக்கு இருப்பின் நாம் அவருடன் பேச தயராகவே உள்ளோம்.
தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நாம் சஜித் பிரேமதாசவை ஆதரித்தோம். சஜித் பிரேமதாசவும் சிங்கள பௌத்தர் தான். அவர் இனவாதியாகவோ பிரிவினைவாதியாகவோ செயற்படவில்லை. எனினும் அவர் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றினை வழங்குவார் என்ற நம்பிக்கையும் வாக்குறுதிகளுக்கு அமையவும் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவை ஆதரித்தனர். அவ்வாறு இருக்கையில் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவை ஆதரித்ததை சாட்டாக வைத்து பிரிவினைவாத அல்லது இனவாத சாயம் எம்மீதோ அல்லது எமது மக்கள் மீதோ பூச வேண்டாம் என்ற காரணியை நாம் கூறுகின்றோம். தமிழ் மக்களும் தென்னிலங்கை சிங்கள பௌத்தர் ஒருவரை தான் ஆதரித்தனர் என்பதை மறந்துவிடவும் வேண்டாம்.
ஆகவே இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஆராய்கின்றது. இந்த வார இறுதிக்குள் இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூடும். அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும் சில தினங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய்வோம். அதேபோல் உண்மையான நோக்கங்களுடன் இதயசுத்தியுடன் ஜனாதிபதி அவர்கள் எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாமும் அவருடன் பேசி தீர்வுகளை நோக்கிய கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்க தயராக உள்ளோம்.
மேலும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இலங்கை விஜயத்தை மேற்கொண்ட பின்னர் ஜனதிபதியும் இந்திய விஜயம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளார். இந்நிலையில் தமிழ் மக்களின் விடயங்களில் சில அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. எவ்வாறு இருப்பினும் இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவித கருத்துக்களையும் பதிவிட விடும்பவில்லை. எமது உறுதியான நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் இராஜதந்திர நகர்வுகளை குழப்பிக்கொள்ள நாம் தாயரில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.