இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகியமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் இணைந்து நடத்திய விசேட மாநாடு ஒன்றிலேயே இந்த விடயம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியிருப்பது குறித்தும், அதனுடன் இணைந்த மற்றும் கட்டமைக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சந்திப்பின் போது மனித உரிமை மீறல்கள் எனக் கூறப்படும் விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது குறித்து இலங்கை தூதுக்குழு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் நிறுவப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய ஐரோப்பிய ஒன்றியம், சமூகங்களிடையே நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சகவாழ்வை வளர்ப்பதன் முக்கியத்துவதையும் எடுத்துரைத்துள்ளது.
இதற்கிடையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து சர்வதேச தரத்திற்கு ஏற்ப அதைக் கொண்டுவருவதற்கான இலங்கையின் தேவையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பொருத்தமான திருத்தங்களைச் செய்யும் நோக்கில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான தனது நோக்கத்தை இலங்கை அரசாங்கம் இதன்போது எடுத்து கூறியுள்ளது.