இணைந்த வடக்கு – கிழக்கு என்பதே தமிழரின் அடிப்படைக் கொள்கை: அரியநேந்திரன்!

இணைந்த வடக்கு கிழக்கு என்பதே தமிழரின் அடிப்படைக் கொள்கை என்பதில் மாற்று கருத்து இல்லை எனவும், இந்த கொள்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக பயணிக்கின்றது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

கிழக்குத் தேர்தல் தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருவது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் ஒரு சின்னத்திலும் கிழக்கில் வேறொரு சின்னத்திலும் தேர்தலில் களம் இறங்கினால் நாமே வடக்கு கிழக்கை பிரித்து கையாளுகின்றோம் என மற்றவர் குறை கூற வாய்ப்புகள் உண்டு.

மாகாணசபை தேர்தல் சம்மந்தமான அறிவிப்புக்கள் வெளியாகியதை தொடர்ந்து தமிழ் கட்சிகளின் இணைவு தொடர்பாக பல கருத்துக்கள் பல்வேறு தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வட.கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த மட்டில் தமிழர்களின் வாக்குகள் பிரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் எந்த கொள்கைக்காக இத்தனை தியாகங்களை எம்மவர்கள் செய்தார்களோ அந்த கொள்கைக்கு மாறாகவோ அல்லது அக்கொள்கைக்கு மாறானவர்களுடனோ கைகோர்க்கவும் முடியாது.

வடக்கு கிழக்கு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அரசியல் தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகிறது. அது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானதல்ல.

தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் சொந்தமானது. எனவே அனைவரும் தமிழர் நலன் கருதியும் எம் மக்களின் இழப்புக்கள், தியாகங்களை மதித்து ஒன்றிணைந்து செயற்படவேண்டியது அவசியமாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !