இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் – ஏ.ஆர்.ரஹ்மான்

கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.   கனடாவில் உள்ள  ரொரண்டோவில் டிசம்பர் 24ஆம் திகதி ஏ.ஆர்.ரஹ்மானின் பெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்பு காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் முதலிய எட்டு மாவட்டங்களில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். நடிகர் சிவக்குமார் தனது குடும்பம் சார்பில் 50 லட்சம் ரூபா நிவாரண நிதியை அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாவையும் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாவையும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

விஜய், சிவகார்த்திகேயன், ஜி.விபிரகாஷ் குமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் டெல்டா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் நிவாரண உதவியை  தனது டுவிட்டார் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !