“இசையெனும் அமுதம்”(21.06.2021 சர்வதேச இசைத் தினத்திற்கான சிறப்புக்கவி )
இசையெனும் அமுதம்
இசைய வைக்கும் இனியகீதம்
அசைவாகி இசைவாகி
எமை இழுக்குமே காந்தமாய்
இசை கேட்கா செவியுண்டோ ?
இசைக்கு மயங்கா மனமுண்டோ ?
இசைக்கென ஒரு தினத்தை
இசைவாக்கியதே ஐ.நா.வும்
ஆனித் திங்கள் இருபத்தியொன்றை !
முத்தமிழில் நடுவாக நின்று
இயலையும் நாடகத்தையும்
இசைய வைப்பது இசை
இனிய நாதமாய்
அழகின் உறைவிடமாய்
ஆனந்தக் களிப்பூட்டுவதும் இசையே !
மூங்கில் காட்டிலும்
தேனீக்கள் கூட்டிலும் இசை
குயிலின் கூவலிலும்
மயிலின் அகவலிலும் இசை
மரம் உரசுவதிலும்
கரம் தட்டுவதிலும் இசையே !
இலையின் அசைவிலும்
உலையின் கொதிப்பிலும்
அலையின் ஆர்ப்பரிப்பிலும்
அருவி கொட்டுவதிலும்
குருவியின் ரீங்காரத்திலும்
பிறப்பது இசையே இசையே !
காற்றாய் தழுவி
மூச்சாய் நுழைந்து
பேச்சோடு கலந்து
தாலாட்டு தொடங்கி
வாழ்வின் இறுதி நீராட்டு வரை
தொடர்கிறது இசைப் பயணம் !
உலகமே போற்றும்
உன்னத இசையை
இசையெனும் அமுதத்தை
நாமும் இரசிப்போம் மகிழ்வோம்
இசையோடு பயணிப்போம் !
கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)