இங்கிலாந்து பிரதமர் தேர்தல் – தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார் லிஸ் டிரஸ்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்த முதல் கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்கும், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகினர். அவர்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்வதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபால் மூலமும், ஆன்லைன் மூலமாகவும் வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்குப்பதிவு அடுத்த மாதம் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் இடையே நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் லிஸ் டிரஸ்சுக்கு 58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்ததாகவும், 26 சதவீதம் பேர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.