இங்கிலாந்தில் கொரோனா தீவிர ஆதிக்கம்: பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறினார் மகாராணி!
பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது தீவிரமாக அதிகரித்து வருவதால் இரண்டாம் எலிசபெத் மகாராணி பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளார்.
கொரோனா தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மாகாராணியின் உடல் நலனை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 93 வயதான இரண்டாம் எலிசபெத் மகாராணியும், 98 வயதான அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளனர்.
அண்மைக்காலத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணி பக்கிங்ஹாம் அரண்மனையில் அநேகமானோரைச் சந்தித்துள்ளார். சிறந்த உடல் நலத்துடன் இருக்கும் மகாராணியின் 94 ஆவது பிறந்த நாளுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன.
இந்நிலையில் அவர் தொடர்ந்தும் அரண்மனையில் இருந்தால் அவரைக் காணவரும் ஏனையோரால் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு வெளியேறியுள்ள மகாராணியும் இளவரசர் பிலிப்பும் வின்ட்சர் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பக்கிங்ஹாம் அரண்மனை உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்கள் உட்பட பார்வையாளர்கள் தொடர்ச்சியாக சென்று வரும் தளமாகும்.
தற்போது பிரித்தானியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 1,140 ஆக உள்ளது. அத்துடன் அங்கு கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.