இங்கிலாந்தில் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சூலா பிரேவர்மென் நியமனம்
இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முந்தைய போரிஸ் ஜான்சன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக சூலா பிரேவர்மென்னை பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார். சூலா பிரேவர்மென், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஆவார். இவரது தாய் உமா தமிழ் நாட்டை சேர்ந்தவர். 1960-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்திலாந்தில் குடியேறினார். அப்போது இங்கிலாந்தில் குடியேறிய கென்யாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவரை உமா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் சூலா பிரேவர்மென்.
போரிஸ் ஜான்சன் அரசில் அட்டர்னி ஜெனரலாக சூலா பிரேவர்மென் பணியாற்றி வந்தார். பர்ஹம் தொகுதி எம்.பி.யான சூலா பிரேவர்மென் கடந்த 2018-ம் ஆண்டு ரெயல் பிரேவர்மென் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சூலா பிரேவர்மென்னுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். லிஸ் டிரசின் அமைச்சர வையில் துணை பிரதமராக தெரேஸ் காபி, நிதி அமைச்சராக குவாசி குவார்டெங், வெளியுறவு அமைச்சராக ஜேம்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பாதுகாப்பு அமைச்சராக பென் வாலஸ் நீடிக்கிறார்.