இங்கிலாந்திடம் தோற்றுப்போன ஆப்கான்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
லண்டனில் நேற்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான உலகக் கிண்ண 9 ஆவது பயிற்சிப் போட்டியில் ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் குல்பாடின் நாய்ப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 38.4 ஓவரை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் மொஹமட் நபி 44 ஓட்டத்தையும், நூர் அலி ஸத்ரான் 30 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றதுடன், ஏனைய வீரர்கள் சொப்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணிசார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோ ரூட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மெய்ன் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
161 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 9 விக்கெட்டக்களால் வெற்றிபெற்றது.
இங்கிலாந்து அணிசார்பில் ஜோனி பெயர்ஸ்டோ 39 ஓட்டத்தை பெற்று ஆட்டமிழந்ததுடன், ஜோ ரூட் 29 ஓட்டத்துடனும், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜோசன் ரோய் 46 பந்துகளில் 11 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 89 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்