ஆஸ்திரேலியாவில் காணாமல் போன இந்திய பெண் மருத்துவர் படுகொலை

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் பிரீத்தி ரெட்டி (32). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 3-ந்தேதி செயின்ட் லியோனார்ட்ஸ் என்ற இடத்தில் நடந்த பல் மருத்துவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள சென்றார்.

அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் பல இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். கடைசியாக அவர்  சிட்னியின் பரபரப்பான பகுதியான ஜார்ஜ் தெருவில் உள்ள  மெக்டொனால்டில் வரிசையில் காத்திருந்தது கண்காணிப்பு காமிராவில் தெரியவந்தது.

இதற்கிடையே அவர் சென்ற கார், கிங்போர்டு பகுதியில் உள்ள ஸ்டரச்சன் லேன் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். காருக்குள் ஒரு பெரிய சூட்கேஸ் இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அதை திறந்து பார்த்தபோது உள்ளே பிரீத்தி ரெட்டியின் பிணம் இருந்தது.

உடலின் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. எனவே அவர் கொலை செய்யப்பட்டு பிணம், சூட்கேசில் வைத்து வீசப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

பல் மருத்துவர்கள் மாநாட்டின் போது பிரீத்தி ரெட்டியுடன் அவரது முன்னாள் காதலர் ஓட்டலில் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் சாலை விபத்தில் ஏற்கனவே பலியாகி உள்ளார்.

எனவே பிரீத்தி ரெட்டியின் கொலைக்கும், அவரது காதலரின் சாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. இச்சம்பவத்திற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !