ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை – இளம்பெண் கைது!

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகே வசித்து வந்தவர் மவுலின் ரதோட் (வயது 25). இந்திய மாணவரான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று, அங்குள்ள கல்லூரி ஒன்றில் கணக்கியல் துறையில் பயின்று வந்தார். இவருக்கும், மேற்கு மெல்போர்னின் புறநகர் பகுதியான சன்பரியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தனியாக வசித்து வரும் அந்த இளம்பெண்ணை பார்ப்பதற்காக மவுலின் ரதோட் கடந்த 23-ந் திகதி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அங்கே படுகாயமடைந்து கிடந்த மவுலின் ரதோடை சிலர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மவுலின் ரதோட் உயிரிழந்தார்.

இது தொடர்பாக அந்த இளம்பெண்ணை காவல் துறை கைது செய்து மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொல்லப்பட்ட மவுலின் ரதோட், தனது பெற்றோருக்கு ஒரே மகன் என அவரது நண்பர் கூறியுள்ளார். இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !