ஆஸிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்டம் நிறைவு

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய தற்போது பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி, அவுஸ்ரேலியா அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஓப்பிடுகையில் இலங்கை அணி, 411 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

ஆட்டநேர முடிவில் தனஞ்சய டி சில்வா 1 ஓட்டத்துடனும், குசல் பெரேரா 11 ஒட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

கன்பெர்ரா மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, இன்றைய தினம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 534 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதில் அவுஸ்ரேலியா அணி சார்பில், மார்கஸ் ஹரிஸ் 11 ஓட்டங்களையும், ஜோ பார்ன்ஸ் 180 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா ஆட்டமெதுவும் பெறாத நிலையிலும், மார்னஸ் லேபுஸ்சேக்ன் 6 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ஹெட் 161 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

குர்டிஸ் பெட்டர்ஸன் 114 ஆட்டமிழக்காது ஓட்டங்களையும், டிம் பெய்ன் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் விஸ்வா பெர்னான்டோ 3 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித மற்றும் சமிக கருணாரத்ன ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களுடன் காயம் காரணமாக ஓய்வறை திரும்ப, திரிமன்னே 41 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

மேலும், சந்திமால் 15 ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸ் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அவுஸ்ரேலியா அணியின் பந்து வீச்சு சார்பில் பெட் கம்மின்ஸ், நாதன் லியோன் மற்றும் மிட்செல் ஸ்டாக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமிருக்க இலங்கை அணி, நாளைய தினம் போட்டியின் மூன்றாவது நாளை தொடங்கவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !