ஆப்கானிஸ்தான் பெண்கள் அச்சமடையத் தேவையில்லை என தலிபான் தலைவர் உறுதிமொழி!

அமெரிக்காவுடன் தலிபான்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், ஆயுத பலம் மூலம் நாட்டை கைப்பற்றுவது. ஆப்கானிஸ்தானுக்கு அமைதியை கொண்டுவராது என்று தலிபான் சார்பாக இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட குழுவை வழிநடத்திய தலிபான் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆயுதம் மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றும் நோக்கம் தலிபான்களுக்கு இல்லை என்றும் தலிபான் குழுவை வழிநடத்திய ஷெர் முகம்மது அப்பாஸ் குறிப்பிட்டார்.

எனினும், வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் வரை சமாதான ஒப்பந்தத்திற்கு இணங்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் தரவுகளின்படி, ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் இறப்பதற்கு ஏனைய தரப்புகளைவிட தலிபான்களே முக்கிய காரணியாக உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 70 சதவீத அச்சுறுத்தலுக்கு தலிபான்களே காரணமாக இருக்கின்றனர். இதனிடையே, கட்டாரில் உள்ள தலிபான் அரசியல் பிரிவுக்கு தலைமை வகிக்கும் ஷெர் முகம்மது அப்பாஸ், மொஸ்கோவில் மூத்த ஆப்கானிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்துள்ளார்.

இந்த தருணத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அவர் தனது முதல் நேர்காணலை வழங்கியுள்ளார். யுத்தத்தைவிட அமைதிதான் கடினமாக உள்ளது என்று பேச்சுவார்த்தையில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டி பேசினார். ஆனால், நிச்சயம் ஒரு தீர்வு எட்டப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்க சிறப்பு தூதுவர் ஜல்மாய் கலில்ஜாத்துடன் கடந்த சில மாதங்களாக அப்பாஸ் மேற்பார்வையிலேயே தலிபான் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.  மாதிரி ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டதாக கலில்ஜாத் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.

ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது மற்றும் எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் எந்தவொரு ஜிஹாதி குழுக்களையும் அனுமதிக்காமல் இருப்பது என்கிற உறுதி மொழியுடன் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது. பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இருதரப்பும் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த 7 ஆண்டுகளாக தொடரும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் மற்றும் அமெரிக்க துருப்புகளை ஆப்கானிஸ்தானிலிருந்து மீளப்பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை 1996-2001 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் தலிபான்கள் ஆட்சி செய்தனர். ஆனால், அது மிகவும் பழமைவாத ஆட்சியாக இருந்தது.

பெண்களை மிக மோசமாக தலிபான்கள் நடத்தியதாக அந்த தருணத்தில் குற்றம்சுமத்தப்பட்டது. பெண்களை பணிக்கு செல்லவோ அல்லது பாடசாலைகளுக்கு செல்லவோ அனுமதிக்கவில்லை.

ஆனால், இப்போது அப்பாஸ், தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவது குறித்து பெண்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.  இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கான் பாரம்பரியம் என்பன வழங்கி உள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !