ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் திடீர் பயணம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு திடீர் பயணமாக சென்றுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்க்கும் வகையில் சிரியா ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகளில் அமெரிக்க ராணுவ படைகள் முகாமிட்டுள்ளன. சிரியாவில் இருந்து சமீபத்தில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்குள்ள குர்து போராளிகளை துருக்கி ராணுவம் கொன்று குவித்தது. சிரியாவின் சில குர்து பகுதிகள் தற்போது துருக்கி கட்டுப்பாட்டில் உள்ளன.
அதே போன்று ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் தலை தூக்கியது. 2001 ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கு முகாமிட்டன. தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்க ராணுவமும் ஆப்கானிஸ்தான் ராணுவப் படைகளும் பதிலடி அளித்து வந்தன. தலிபான் பயங்கரவாதிகளுடன் அவ்வப்போது அமைதிப்பேச்சு வார்த்தை முயற்சிகளும் நடந்தன.
இந்நிலையில், திடீர் பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நேற்று மாலை டிரம்ப் ஆப்கானிஸ்தான் சென்றார். டிரம்பும், அஷ்ரப் கானியும் காபூல் நகரிலிருந்து இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பக்ராம் வான்வழி தளத்தில் உள்ள அமெரிக்க படைகளை சந்தித்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடியதற்காக அனைத்து வீரர்களுக்கும் இருவரும் நன்றி தெரிவித்தனர்.
‘போர் நிறுத்த ஒப்பந்தத்தை விரும்பாத தலிபான்கள் தற்போது ஒப்பந்தம் ஏற்படுத்த விரும்புகின்றனர். நிச்சயம் இது பயனுள்ளதாக இருக்கும்’ என டிரம்ப் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில் இதுவரை 2400 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2018 ம் ஆண்டு மட்டும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் 3,804 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7,189 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.