ஆட்சி மாற்றம் குறித்து மஹிந்தவிடம் பேச வேண்டிய தேவை எமக்கில்லை: மனோ

தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் 2025ஆம் ஆண்டுவரை தொடரும் என்றும், ஆட்சி மாற்றம் தொடர்பாக தற்போது கவனஞ்செலுத்த தேவையில்லையென்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இறக்குவானையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறிப்பாக, அண்மையில் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன், ஆட்சி மாற்றம் தொடர்பாக கலந்துரையாடியதாக சிங்கள ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மஹிந்தவுடனான சந்திப்பில், மாகாண சபை தேர்தல் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டதாக மனோ இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் 2020 வரை மட்டுமன்றி 2025இலும் தொடரும் என்றும் அதனால் தற்போது அதுபற்றி பேசவேண்டிய தேவை இல்லையென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதிய முறையில் தேர்தலை நடத்துவதென்றால் அதற்கான சட்ட வரைபுகளை தயாரிக்க வேண்டும். அதனால் தேர்தல் மேலும் பல மாதங்களுக்கு பிற்போடப்படலாமென தெரிவித்த அமைச்சர் மனோ, பழைய முறையில் தேர்தலை நடத்துவதே சிறந்ததென குறிப்பிட்டார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !