ஆசைமுகம் மறந்து போகுமா ? (காதலர் தின சிறப்புக்கவி )

கண்ணான கண்ணாளனே
கனிவான என் மன்னவனே
எங்கேயோ பிறந்து
எங்கேயோ வளர்ந்து
எதிர்பாராமலேயே இணைந்து
இதயச் சிறைக்குள் நுழைந்து
இசையால் எனைத் தாலாட்டி
என்னுயிர் ஆனவனே !
உந்தன் ஆசைமுகம் மறந்திடுமா?
எந்தன் அன்பு தான் குறைந்திடுமா ?

இல்லறமெனும் இனிய பந்தத்தில்
இணையாக இணைந்து
இதயங்கள் இரண்டும் சங்கமமாகி
இன்பக் காதலை அள்ளித் தந்து
இதயத்தை நிறைத்தவனே
இல்வாழ்வில் ஆண்டுகள் இருபது
இனிதாய் கடந்தபோதும்
இமயமாய் இருக்கிறதே எம்காதல் !

இனிதான காதலால்
இல்லறச் சோலையை
இனிய நந்தவனமாக்கி
முத்தான மூன்று முத்துக்களை
எனக்கு சொத்தாகத் தந்து
தாய்மையின் பெருமையை
தூய்மையாய் தந்தவனே
உந்தன் ஆசைமுகம் மறந்திடுமா ?
எந்தன் அன்புதான் குறைந்திடுமா ?

வாழ்வு எனும் பூஞ்சோலையை
வளமாக்கி நல் உரமிட்டு
வளமோடு நாம் வாழ
வற்றாத அன்பினை
வாரித் தந்த மன்னவனே !

தென்றலாய் எனை வருடி
தெம்மாங்கு இசைபாடி
தெப்பமாய் எனை
நெஞ்சினிலே சுமக்கும்
எந்தன் கண்ணாளனே
எந்நாளுமே குறையாதே என் அன்பும் !

மனதிற்கு இனியவனே
மாசற்ற மணாளனே
வாழும் காலம் வரை
காதலும் கூட வாழும்
வாழ்ந்திடுவோம் நாமும் காதலோடு
காதலே சுகம் காதலே ஜெயம் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 14,02,2019


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !