ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசிற்கே உண்டு: மேல் நீதிமன்றம்

பணிக்கு  திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை  எடுக்கும் பொறுப்பு அரசிற்கே உண்டு என சென்னை மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களின் போராட்டத்துக்கு எதிராக சென்னை மேல் நீதிமன்றத்தில் கோகுல் என்ற பள்ளி மாணவன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதன்போது குறித்த வழக்கின் மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர், “மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் ஜனவரி 25ஆம் திகதிக்கு  முன்பாக பணிக்கு திரும்ப வேண்டும்” என உத்தரவிட்டனர்.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் நேற்றும் (வெள்ளிக்கிழமை) ஆசிரியர்கள் பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மனுதாரர் சட்டத்தரணி நவீன்குமார் மூர்த்தி, நீதிபதிகள் முன்பு நேற்று ஆஜராகி, “நீதிமன்றத்தின் உத்தரவை ஆசிரியர்கள் மதிக்கவில்லை. ஆகவே  அவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள் “ஆசிரியர்களின் போராட்டத்தை நாங்கள் சட்டவிரோதமென அறிவிக்கவில்லை. மாணவர்களின் நலன் கருதி 25 ஆம் திகதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென்றே உத்தரவிட்டோம்.

ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசிற்கே உண்டு” என சென்னை மேல் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரச ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !