ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு சேர்ப்பு!

விளையாட்டு இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 2022ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்ஷு நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை ஆசிய ஒலிம்பிக் சபை அளித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு மற்றும் 2014
ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்றிருந்த கிரிக்கெட் போட்டி, அதன்பின் 2018ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து நீக்கப்பட்டது.

மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் போட்டியைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, 2022ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிய ஒலிம்பிக் அமைப்பின் துணைத் தலைவர் ரன்திர் சிங் கூறுகையில், ‘2022ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு ஆசிய ஒலிம்பிக் சபை பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. சீனாவின் ஹாங்ஷு நகரில் கிரிக்கெட் விளையாடப்படும்’ என கூறினார்.

2022ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு இருப்பதால், பெரும்பாலும் ரி-20 கிரிக்கெட் விளையாடப்படுவதற்கே அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

கடந்த, 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இலங்கையும், மகளிர் பிரிவில் பாகிஸ்தானும் தங்கம் வென்றன. 2010ஆம் ஆண்டில் பங்களாதேசும், பாகிஸ்தானும் தங்கம் வென்றன.

கடந்த 1998ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டில் கூட கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டது.

கோலாலம்பூரில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஷோன் போலக் தலைமையிலான தென்னாபிரிக்கா அணி தங்கத்தையும், ஸ்டீவ் வோஹ் தலைமையிலான அவுஸ்ரேலியா அணி வெள்ளியும் வென்றன.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010ஆம் மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இந்த போட்டிகளுக்கு அணியை அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !