ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்
வெளியேற்றப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணை, தற்போது நடைபெற்று வருகிறது.
இராணுவ சதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பதவியில் இருந்து நீக்கிய நான்கு மாதங்களுக்குப் பிறகு, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்தது மற்றும் கொவிட் கட்டுப்பாடுகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அண்மையில், தனது ஆட்சிக் காலத்தின்போது ஆங் சான் சூகி தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, வீட்டு மனை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாகவும் அண்மையில் இராணுவ ஆட்சியாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
அவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படால் அவரை 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும் என்ற கருத்து வெளியாகியிருந்த நிலையில், தற்போது அவர் மீதான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மனித உரிமைக் குழுக்கள் இந்த விசாரணையை கண்டித்துள்ளன. இது எதிர்கால தேர்தல்களில் அவர் போட்டியிடுவதைத் தடுக்கும் முயற்சி என்று குற்றஞ்சாட்டியுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி மியன்மார் இராணுவம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது.
இதன்பின்னர், நாட்டின் தலைவர் 75வயதான ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைண்ட் உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்த இராணுவம், நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தியது.
ஆனால், இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது.
தற்போதுவரை மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.