அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி: ஸ்டாலின் கடும் விமர்சனம்

அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி ஏற்கெனவே 2009இல் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தையில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக வேலூரில் தி.மு.க. முகவர் கூட்டத்தில் கலந்துகொண்ட கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பா.ம.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்துள்ளது. இது ஏற்கனவே தோல்வியடைந்த கூட்டணி.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து ஏற்கனவே ஏழு தொகுதிகளில் பா.ம.க. போட்டியிட்ட போது என்ன நிலைக்கு ஆளானார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு என்ன நடக்குமென்று பார்க்கலாம்.

இதே பா.ம.க. கட்சியின் நிறுவனர் இராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் பேசாத பேச்சில்லை. சமீபத்தில் அ.தி.மு.க.வை விமர்சித்து இராமதாஸ் புத்தகமே எழுதியிருக்கிறார். இவ்வாறு விமர்சித்தவர் இன்றைக்கு ஊழல்வாதிகளோடு கூட்டிணைந்து கையெழுத்து போடுகிறார்.

மக்களைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ கவலைப்படாமல் பணத்தை மட்டுமே இலக்குவைத்து இன்று கூட்டணி அமைத்துள்ளார்கள்.

ஆனால் எமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி சூழ்நிலைக்காக கூடியதல்ல. நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளது” என்று அவர் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !