Main Menu

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஒசாகா- ஜோகோவிச் சம்பியன்!

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நவோமி ஒசாகா மற்றும் நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஜெனீபர் பிரெடி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை நவோமி ஒசாகா 6-4 என கடுமையாக போராடி கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், அதே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நவோமி ஒசாகா 6-3 என செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

இது நவோமி ஒசாகாவின் நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அத்துடன் இது இரண்டாவது அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டமாகும்.

முன்னதாக நவோமி ஒசாகா, 2019ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.


ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நோவக் ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என போராடிக் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார்.

மூன்றாவது செட்டில் எவ்வித நெருக்கடியையும் எதிர்கொள்ளாத ஜோகோவிச், இந்த செட்டையும் 6-2 என இலகுவாக கைப்பற்றி சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டார்.

இது நோவக் ஜோகோவிச்சின் 18ஆவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டமாகும். அத்துடன் இது ஜோகோவிச்சின் ஒன்பதாவது அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டமாகும்.

முன்னதாக அவர், 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020ஆம் ஆண்டுகளில் இந்த தொடரில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதுதவிர அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் அதிக சம்பியன் பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையும் அவரையே சேரும்.