அரச குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த ஹரி- மேகன் மார்க்கல்!
பிரித்தானிய இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் ஆகிய இருவரும் அரச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள் குறித்தும் பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம்டைம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய இரண்டு மணி நேர நேர்காணலில் வெளியிட்ட விபரங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன.
அரச குடும்ப வாழ்க்கை குறித்த மேகனின் கருத்துக்களை ஓப்ரா கேட்டபோது, ‘நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை. இதை நான் ஹரியிடம் கூறுவதற்கு வெட்கப்படுகிறேன். ஏனெனில் ஹரி சந்தித்த இழப்புகள் அவ்வளவு அதிகம்’ என கூறினார்.
அப்போது நீங்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கொண்டிருந்தீர்களா என்று ஓப்ரா கேட்டதற்கு, ‘ஆம்!. அது எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைத்தேன். தனது இந்த எண்ணத்திலிருந்து விடுபட தேவையான ஆலோசனையை பெற அமைப்பொன்றின் உதவியை நாடும் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது’ என கூறினார்.
‘தங்களுடைய திருமணம் தேவாலயத்தில் முறைப்படி நடக்கவிருந்த மூன்று நாட்களுக்கு முன்பே எங்களுக்கு திருமணம் நடந்து விட்டது. இதுவரை அது பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. கேட்டர்பரி பேராயரை அழைத்து, உலகின் பார்வைக்குதான் பெரிய திருமணம், ஆனால், எங்களுடைய இணைப்புக்கான திருமணமாக இது நடக்க வேண்டும் என்று கூறினோம்’ இந்த தகவலை முன்பே பதிவு செய்த கலந்துரையாடல் தொகுப்பின்போது மேகன், ஹரி தம்பதி ஓப்ராவிடம் தெரிவித்தனர்.
மேலும், ‘தங்களுக்கு ஆர்ச்சி மகனாக பிறந்தபோது அவரை இளவசர் ஆக அறிவிக்கவில்லை. அந்த தகவல் கிரகித்துக் கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. காரணம் அது பட்டம் பற்றியது மட்டுமல்ல. அவருக்கு பாதுகாப்பு கிடைக்காது என்பதுதான்’ என கூறினார்.
மகாராணியுடனான முதல் சந்திப்பு அனுபவம் பற்றி கேட்டதற்கு, ‘முதல் முறையாக பார்த்தபோது அது ஒரு பெரிய சம்பிரதாயமாக எனக்கு தோன்றவில்லை. ஆனால், ஹரி தன்னிடம் மரியாதை செய்வது எப்படி என தெரியுமா என கேட்டபோது, எப்படி செய்வது என வியந்தேன்’ என கூறினார்.
இதனைத்தொடர்ந்து இளவரசர் ஹரியிடம் வினவிய போது, ‘ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் முற்றிலும் கைவிட்டனர். எனது பாதுகாப்புக்கு நானே பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
என்னுடைய தாய் விட்டுச்சென்ற பணம் என்னிடம் உள்ளது. என்னைப் பொறுத்தவரை, நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். என் மனைவி என் பக்கத்தில் அமர்ந்திருக்க, உங்களுடன் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என கூறினார்.
அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகியபோது சந்தித்த விடயங்கள் குறித்து மேலும் பேசிய அவர், இது எங்கள் இருவருக்கும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தது. ஆனால் குறைந்தபட்சம் நாங்கள் ஒருவருக்கொருவராக இருந்தோம்’ என கூறினார்.
அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலக என்ன காரணம் என்று ஓப்ரா கேட்டபோது, ‘அது அவசியப்பட்டது. நாங்கள் எல்லா இடங்களுக்கும் தனித்தனியாகவும் இணைந்தும் சென்று உதவி கேட்டோம்’ என்று கூறினார்.
அப்படியென்றால் நீங்கள் உதவி கேட்டு அது கிடைக்காமல் போனதால்தான் அந்த முடிவை எடுத்தீர்களா என ஓப்ரா கேட்டதற்கு, ‘ஆமாம். அப்போதும் கூட நாங்கள் குடும்பத்தை விட்டு விடவில்லை.
அப்போது மேகன், ‘அவர்கள்தான் ஏற்கெனவே உள்ள ஒரு வகை பொறுப்பில், அதாவது அரச குடும்பத்து மூத்த உறுப்பினர் பொறுப்பில் இல்லாதவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என விரும்பினார்கள்’ என்று தெரிவித்தார்.