அரசியல் மட்டுமன்றி மனித நேயத்தையும் மீள கட்டியெழுப்ப வேண்டும் – சுரேன்

இந்த தேசத்தை மீளவும் கட்டியெழுப்பும் போது அரசியல் மட்டுமன்றி மனித நேயத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அரச புகைப்பட ஆலோசனைக்குழு, கலாசார அமைச்சு, இலங்கைக் கலைக்கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலான அரச புகைப்பட கண்காட்சி இன்று யாழில் ஆரம்பிக்கப்பட்டது.
இதனை கலாநிதி சுரேன் ராகவன், யாழ். தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் 2016, 2017, 2018 வருடங்களில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், இந்த தேசம் மீளக் கட்டியெழுப்பப்படுகின்ற அதேவேளையில் அரசியலுடன் மனித நேயத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என குறிப்பிட்டார்.


