அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி 46 பேருக்கு வட. மாகாணத்திற்கு நியமனம்

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி பெரும்பான்மையினத்தை சேர்ந்த 46 பேருக்கு வட. மாகாணத்திற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஆறு வாரகாலமாக அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் எரிபொருள் மின் சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட சியம்பலாப்பிட்டியவே இந்த நியமனங்களை வழங்கியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நியமனங்களை இரத்து செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அபிவிருத்தி செயலணியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்தி வடக்கு மாகாணத்தில் இலங்கை மின்சார சபையில் காணப்பட்ட வெற்றிடங்களிற்கு தெற்கு இளைஞர்களை நியமனம் செய்துள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக க.பொ.த உயர்தர கல்வி தகுதி உடையவர்களுக்கு வழங்க கூடிய வெற்றிடங்களை, க.பொ.த. சாதாரண தர கல்வி தகுதியுடையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றிடங்களிற்கு எமது மாகாண இளைஞர்களை நியமனம் செய்யுமாறு நாம் நீண்டகாலமாக கோரி வந்த நிலையில், அந்த வெற்றிடங்களிற்கு இவ்வாறு இரகசியமான முறையில் எந்த விண்ணப்பமும் கோராமல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட அனைவருமே கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறிந்துள்ளோம். குறித்த நியமனங்களை இரத்து செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அபிவிருத்தி செயலணியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் குழப்ப நிலை காணப்பட்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா, நியமனங்கள் எதுவும் வழங்கப்பட கூடாது என உத்தரவிட்டிருந்த போதும், அதனையும் மீறியே குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !