Main Menu

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பேனா நினைவு சின்னத்தை எதிர்ப்பதா?- கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 13 வயதில் அரசியலில் பிரவேசம் செய்து 95 வயது வரை தமிழ்ச் சமுதாயத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த கலைஞருக்கு சென்னை கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்திற்கு அருகில் கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமது பொது வாழ்க்கையை எழுத்து, பேச்சை அடிப்படையாகக் கொண்டு அரசியல் பணியாற்றி, தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்து சமூகநீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர். கருத்து வேறுபாடுகளைக் கடந்து தமிழக அரசியல் தலைவர்கள் நினைவைப் போற்றுகிற வகையில் நினைவுச் சின்னம் எழுப்பியவர் கலைஞர். தமது எழுத்தாற்றல் மூலமாக ஆற்றிய மகத்தான தொண்டினை போற்றுகிற வகையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது. இத்தகைய முடிவை எதிர்த்து அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் கருத்துகளைக் கூறி வருகிறார்கள். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். கடற்கரை மணல் பரப்பிலிருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதனால் சுற்றுச் சூழலுக்கு என்ன பாதிப்பு வந்து விடும் என்று தெரிய வில்லை. இதற்கான தெளிவான விளக்கத்தை தமிழக அரசின் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த ஒரு மாத காலம் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ள கடற்கரை பகுதியில் அதிகாலையில் ஆய்வு செய்து அங்கு ஆமைகளோ, மீன்களோ இல்லை என்று அறிக்கை வழங்கியிருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களும் கடலில் தான் இருப்பதைப் பார்த்துப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு ஏறத்தாழ 10 மைல் தொலைவிற்கு கடலில் தான் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள ஏன் மறுக்கிறார்கள் ? அதேபோல, இந்தியாவில் முதன்முறையாக கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் அமைக்கிற பணியை இந்திய கடற்படை, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஒரு அரசு சாரா நிறுவனத்துடன் கை கோர்த்து நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் மத்திய அரசு தொடங்க உள்ளது. கடலில் மூழ்கடிக்கப்பட்டு, நீருக்கு அடியில் 26 மீட்டர் ஆழத்தில் உள்ள ஐ.என்.எஸ். கடலூர் என்ற கப்பலையே இத்திட்டத்தின் மூலமாக அருங்காட்சியகமாக மாற்றியமைக்க உள்ளார்கள். இந்த அருங்காட்சியகத்தை காண கடற்கரையில் இருந்து 7 கி.மீ. தொலைவிற்குச் செல்ல வேண்டும். இத்தகைய அருங்காட்சியகத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று இதுவரை எவரும் குரல் எழுப்பவில்லை. மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் உள்ளே அரபிக் கடலில், மராட்டிய அரசு சார்பில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்படுகிறது. இந்த நினைவிடம், 3,600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நினைவிடத்தில், குதிரை மீது மன்னர் சிவாஜி அமர்ந்திருப்பது போல 210 மீட்டர் உயரத்துக்கு சிலை அமைக்கப்படுகிறது. இதுதான் உலகிலேயே உயரமான சிலையாக இருக்கும். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே. அதேபோல, உலக நாடுகளில் பார்த்தால் நூற்றுக்கணக்கான அருங்காட்சியகங்களும் சுரங்கப்பாதைகளும் பல கீ.மீ. ஆழத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளன. காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை விமர்சித்து வருகிறார்கள். இத்தகைய விமர்சனங்களை வைப்பவர்கள் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியும். தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த கலைஞருக்குத் தமிழக அரசு அமைக்கும் பேனா நினைவுச் சின்னத்தை ஆதரித்தால் ஊடக வெளிச்சம் கிடைக்காது. விமர்சனம் செய்தால் தான் ஊடகத்தின் வெளிச்சமும், பார்வையும் கிடைக்கும் என்ற நப்பாசையில் இவர்களது விமர்சனங்கள் அமைந்துள்ளன. மலிவான அரசியல்வாதிகளிடம், மலிவான விமர்சனத்தைத் தான் எதிர்பார்க்க முடியும். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அணுகுமுறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் வகுத்த பாதையில், நிமிர்ந்த நடையோடு, நேர்கொண்ட பார்வையோடு செயலாற்ற வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.