அரசால் காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வர முடியாது- செந்தில் பாலாஜி பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் முதலில் உண்ணாவிரதம் இருந்தார். அதன்பிறகு திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். தொடர்ந்து காவிரிபாயும் 9 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி கரூரில் வருகிற 18-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் டி.டி.வி. தினகரன் பங்கேற்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க. நடத்தும் போராட்டம் தொடர்பான விளம்பரங்களில் மத்திய அரசை கண்டித்து என்ற வார்த்தையை பயன் படுத்தாமல் மத்திய அரசை வலியுறுத்தி என்ற வார்த்தையை பயன் படுத்தி வருகின்றனர். கண்டிக்கக்கூடிய தைரியம் இல்லாத இந்த அ.தி.மு.க. அரசால் காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வர முடியாது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அந்த மாநில மத்திய மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்தார்கள். தமிழகத்தின் உரிமையை காக்கத்தான் தம்பித்துரைக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்று கொடுத்தார். ஆனால் உரிமையே பறிபோகும் போது , ராஜினாமா செய்து அழுத்தம் கொடுத்திருந்தால் உறுதியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்கும்.

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதன்பிறகு சட்டமன்றத்திற்கு சென்று அம்மா ஆட்சியை அமைப்போம். சிறப்பு அமாவாசை விரைவில் வரும். அதன்பிறகு இப்போது உள்ள அமாவாசைகள் வீட்டிற்கு செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !