Main Menu

அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம் செலுத்துவதில்லை – சந்திம வீரக்கொடி குற்றச்சாட்டு

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வினையே நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அரசாங்கம் அவை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமல் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தலுக்கு முன்னர் நாம் கூறிய விடயங்களைக் கேட்பதற்கு கூட மக்கள் தயாராக இருக்கவில்லை. ஆனால் தற்போது முற்று முழுதாக அரசாங்கம் முன்னர் கூறியவற்றுக்கு முரணான வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. எனினும் விரைவில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதால் தற்போது சில தீர்மானங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொலிஸாரும் அரசாங்கத்துக்கு சார்பாகவே செயற்படுகின்றனர். அரசியல் அழுத்தங்களால் சட்டத்தை மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. சட்டமானது எதிர்க்கட்சிகளைப் போன்று ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்று அரசாங்கத்துக்கு தேவையானோர் பாதுகாக்கப்பட்டு ஏனையோர் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறு செயற்படுமானால் இலங்கை மாத்திரமல்ல முழு அரசாங்கமும் மக்களால் தூய்மைப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும். அமைச்சர்களுக்கான சிறப்புரிமைகளைக் குறைத்து ஒரு சுற்று நிரூபமேனும் வெளியிடப்பட்டுள்ளதா? கொலை செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு என்ன பதில்? இவற்றையே மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனவே மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

பகிரவும்...
0Shares