அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தி.. சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஓன்றுபட வேண்டும் – அகில விராஜ்

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்துள்ள நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியினர் ஒன்றுபட்டால் தேர்தலில் வெற்றிபெறமுடியும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கையினால் மக்கள் பாரிய விரக்தியடைந்துள்ளனர் எனவே ஐக்கிய தேசிய கட்சியினர் ஒன்றுபட்டு செயற்பட்டால் மீண்டும் ஆட்சியமைக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
இந்த அரசாங்கம் ஆட்சிபீடத்தில் அமர்ந்து நூறு நாட்கள் கடந்துள்ளபோதும் அவர்களால் மக்கள் எதிர்பார்த்த எதனையும் பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளது. இதனால் அரசாங்கம் மக்கள் செல்வாக்கை இழந்துவருகின்றது.
அரசாங்கம் சீனாவுடைய கொள்கையினை பின்பற்றி சென்றது. ஆனால் இன்று சீனா கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி இருப்பதால், அரசாங்கத்துக்கு நிதி உதவிகளை பெறுவதற்கு வேறு வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றது.
இவர்கள் சீனாவை மாத்திரமே நம்பி மாத்திரமே செயற்பட்டு வந்தார்கள் அத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கின்றது.
குறிப்பாக நிதி வழங்குவதற்கு வேறு நாடுகள் இல்லை. சீனா எதிர்கொண்டுள்ள பிரச்சினை காரணமாக எமது நாட்டின் சுற்றுலாத்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.