அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் வழக்கு ஒத்திவைப்பு

அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேன்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கின் மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது அயோத்தி வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படுமென நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும் அயோத்தி வழக்கை விசாரிக்கும் தகுதிவாய்ந்த புதிய அமர்வு குறித்து ஜனவரி 10 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த விசாரணை இன்றைய தினம் ஒரு நிமிடம் மாத்திரமே இடம்பெற்ற நிலையில் எந்த வாதமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அயோத்தி வழக்கை தினந்தோறும் விசாரணை நடத்த வலியுறுத்தி வழக்கறிஞர் ஹரிநாத் ராம் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அயோத்தியில் இந்துக்கள் தமது வழிபாழிபாட்டு தளத்தை அமைக்க போராடி வரும் நிலையில், முஸ்லிம்கள் அங்கு பள்ளிவாசலை அமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்த நிலையில், புதிதாக அமைக்கப்படும் அமர்வு அதனை விசாரிக்கும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !