அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் ஞானசாரர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் மாகாண சபை அமைச்சில் நேற்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் பிரவேசித்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது.
நேற்றுக்காலை இந்தக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் அமைச்சின் செயலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த கூட்டத்தின் இடைநடுவில் உட்புகுந்த கலகொட அத்தேஞானசார தேரர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதில் காண்பிக்கப்படும் காலதாமதம் தொடர்பில் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இழுத்தடிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கிழக்கில் பல்வேறு கிராமங்களுக்கு அராபிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத் என்று ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாடுகளுக்கு ஏன் அனுமதிக்கின்றீர்கள் என்றும் ஞானசார தேரர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரின் கருத்துக்களை அடுத்து அமைச்சர் வஜிர அபேவர்த்தன அம்பாறை மாவட்ட செயலாளர் உட்பட அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.