அமைச்சர் சஜீத் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்காமைக்கு மக்கள் அதிருப்தி

மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவினை வரவேற்கும் நிகழ்வில், அமைச்சர் கலந்துகொள்ளாமல் சென்றதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கும்புறுமுலையில் வீடமைப்பு திட்டத்தினை திறந்துவைப்பதற்காக, அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

அமைச்சர் சஜீத் பிரேமதாச, மீண்டும் வீடமைப்பு அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவரை வரவேற்கும் வகையில் குறித்த பகுதியின் மக்கள், கல்லடி பாலத்தடியில் அமைச்சருக்கு வரவேற்பளித்து அங்குள்ள ஒளவையார் சிலைக்கு மாலையணிவிக்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

அத்தோடு  அமைச்சரை வரவேற்பதற்காக காலை 7.00மணி முதல் பெருமளவான பொதுமக்கள் கல்லடி பாலத்தில் குழுமியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்காது சுமார் 9.30 மணியளவில் கல்லடி பாலத்தினை கடந்து அமைச்சரின் வாகனங்கள் சென்றுள்ளன.

பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதுடன், குறித்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் அமைச்சர் சென்றமைக்கு  அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !