அமேதி எங்கள் தந்தையின் புண்ணியபூமி, எங்களது புனிதஸ்தலம் – பிரியங்கா
ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்த அமேதி எங்கள் தந்தையின் புண்ணியபூமி, எங்களது புனிதஸ்தலம் என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதே தொகுதியில் மீண்டும் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா மற்றும் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று அமேதி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில செயலாளர் பிரியங்கா காந்தி இந்த தொகுதிக்கும் தங்களது குடும்பத்துக்கும் இடையில் உள்ள நெருக்கமான பந்தம் தொடர்பாக குறிப்பிட்டார்.
’சில உறவுகள் இதயத்தோடு நெருக்கமாக உள்ளவையாகும். இந்த அமேதி தொகுதி எங்கள் தந்தையின் (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி) புண்ணியபூமி, எனவே, இது எங்களது புனிதஸ்தலம். அதனால்தான், ராகுல் காந்தி வேட்புமனு தாக்கலுக்காக நாங்கள் இங்கே குடும்பமாக வந்திருக்கிறோம்’ என பிரியங்கா உணர்வுப்பூர்வமாகவும், உருக்கமாகவும் தெரிவித்தார்.