அமேசான் தலைவர் முன்னாள் மனைவி ரூ.1¼ லட்சம் கோடி நன்கொடை
அமேசான் நிறுவனத்தின் தலைவரின் முன்னாள் மனைவி தனது சொத்தில் இருந்து ரூ.1¼ லட்சம் கோடியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55).
இவர், அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு நாவலாசிரியரான மெக்கின்சியை (48) காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்துவந்த ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கின்சி ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.
அதனை தொடர்ந்து, ஜெப் பெசோஸ், தனது சொத்தில் 25 சதவீதத்தை மனைவி மெக்கின்சிக்கு ஜீவனாம்சமாக கொடுக்க முடிவு செய்தார்.
அதன்படி 35 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) மெக்கின்சிக்கு வழங்குவதாக அவர் அறிவித்தார்.
இதன் மூலம் உலகிலேயே அதிக தொகையை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு ஜெப் பேசோஸ் சொந்தக்காரர் ஆனார்.
அதே போல் கணவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி பெற்றதன் மூலம் மெக்கின்சி, உலகின் 3-வது மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
மெக்கின்சியின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 37 பில்லியன் டாலர்களாக (ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் கோடி) உள்ளது.
இந்த நிலையில் தனது சொத்தில் சரிபாதி தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக மெக்கின்சி உறுதிமொழி அளித்துள்ளார்.
அதவாது 18.5 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் கோடி) நன்கொடையாக வழங்க இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் வாழ்வதற்கு தேவையானதை விட கூடுதலாக, பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அதிகமான சொத்துகள் என்னிடம் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் “எனது மனித நேய அணுகுமுறை தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு சற்று காலம் ஆகும். ஆனால் நான் அதுவரை காத்திருக்க மாட்டேன். என்னிடம் இருப்பது காலியாகும் வரை நான் இதை தொடருவேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
மெக்கின்சியின் இந்த கொடை உள்ளத்தை அவரது முன்னாள் கணவர் ஜெப் பெசோஸ் பாராட்டி உள்ளார். இது பற்றி அவர் டுவிட்டரில், “மெக்கின்சி, மனநேய அணுகுமுறையில் மிக சிறப்பாகவும், நல்ல சிந்தனையுடனும் செயல்படுகிறார். அவரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.