அமெரிக்க – துருக்கி ஜனாதிபதிகள் இடையே நேருக்கு நேர் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் இருவரும் வெகுவிரைவில் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரேஷ்ட துருக்கி அதிகாரியொருவர் நேற்று (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.
துருக்கியில் அல்லது ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின் ஒரு அங்கமாக இச்சந்திப்பு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு எர்டோகன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, அவ்வழைப்பை ட்ரம்ப் ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்கு துருக்கி ஒப்பந்தம் செய்தது. ரஷ்யாவிடம் ஏவுகணைகளை கொள்வனவு செய்யக்கூடாது என அமெரிக்கா எச்சரித்தது. ஆனால், எச்சரிக்கையை மீறி துருக்கி ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டிவந்த நிலையில் துருக்கிக்கு போர் விமானங்களை வழங்கும் செயற்பாட்டை அமெரிக்கா நிறுத்தியது.
இவ்வாறாக இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இச்சந்திப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.