அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!

அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது.

பதவிக்காலம் நிறைவடையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண மற்றும் உள்ளூர் நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யும் வகையிலேயே இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளமை காரணமாக குறித்த தேர்தல் இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்தத் தேர்தல் டிரம்ப்பின் அதிரடிக் கொள்கைகளுக்கு ஒரு அக்னிப் பரீட்சையாக இருக்கும் என அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

குடியேற்றக் கொள்கைகளை மாற்றுவது, ஜனநாயகக் கட்சியினர் போற்றிப் பாதுகாத்து வந்த கல்வி, உள்துறை, தொழிலாளர் நலம், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி போன்ற துறைகளின் முக்கியத்துவத்தை குறைப்பது, அனைத்து அமெரிக்கர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கும் ஒபாமாகேர் திட்டத்தை ஒழிப்பது போன்றவையே டிரம்ப்பின் கொள்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் அதிக அளவில் வெற்றி பெற்றால், அந்தக் கொள்கைகளை டிரம்ப்பால் மிக எளிதில் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்கிறனர் அரசியல் விமர்சகர்கள்.

தற்போதுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சினரின் கையே மேலோங்கியுள்ளது. இந்த நிலையில், தற்போதைய தேர்தலில் அந்த பலம் அதிகரிப்பது டிரம்ப்புக்கு மிகச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், சில கருத்துக் கணிப்புகள் கூறுவதைப் போல ஜனநாயகக் கட்சினர் அதிக இடங்களைப் பிடித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றால் அது டிரம்ப் அரசுக்கு தலைவலியாக இருக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !