அமெரிக்க அதிபர் “மிடுக்கான உடையணிந்த பயங்கரவாதி” – ஈரான் கண்டனம்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை “மிடுக்கான உடையணிந்த பயங்கரவாதி” என்றுகூறி ஈரான் கண்டித்துள்ளது.
ஈரானிய ராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவின் ஆகாயத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு டெஹ்ரான் பதிலடி கொடுத்தால், ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்களைத் தாக்கப் போவதாகத் திரு. டிரம்ப் மிரட்டியிருந்தார்.
அதனையடுத்து ஈரானின் கண்டனம் வெளியானது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர், ஹிட்லர், மங்கோலிய அரசன் செங்கிஸ் கான் ஆகியோரைப் போல கலாசாரத்தை வெறுப்பவர் திரு. டிரம்ப் என்று ஈரானியத் தகவல்-தொலைத் தொடர்பு அமைச்சர் ஜாவத் அஸாரி ஜாரோமி (Javad Azari-Jahromi) தெரிவித்தார்.
அத்துடன், ஈரானையும், அதன் கலாசாரத்தையும் யாராலும் அழிக்கமுடியாது எனும் பாடத்தை திரு. டிரம்ப் விரைவில் படிக்கவிருக்கிறார் என்றும் Twitterஇல் பதிவிட்டார்.
நேற்று முன்தினம், பாக்தாத் அனைத்துலக விமான நிலையத்தில் ஆளில்லா வானூர்தி மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானியத் தளபதி மாண்டார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதற்கு உத்தரவிட்டிருந்தார்.