அமெரிக்கா – ஜப்பான் : வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை
அமெரிக்கா – ஜப்பான் நாடுகளிடையே, வர்த்தகம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
சீனாவுடனான வர்த்தகப் போரை அமெரிக்கா தொடங்கிய காலக்கட்டத்தில், ஜப்பான் நாட்டிலிருந்து இறக்குமதியாகும், இரும்பு உள்ளிட்ட பொருட்களுக்கு, 25 விழுக்காடு அளவிற்கு, டிரம்ப் நிர்வாகம் வரியை உயர்த்தியது.
இதையடுத்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஜப்பான் அரசும் வரியை உயர்த்தியது. இந்த சூழலில், வேளாண் உற்பத்தி பொருட்கள், சாகுபடிக்குத் தேவையான இடு பொருட்கள் ஆகியவற்றின் தேவை ஜப்பானில் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பன்னாட்டளவில், வேளாண் உற்பத்தி பொருட்களை கையாளும், முக்கிய சந்தையாகவும், ஜப்பான் திகழ்கிறது. இதையடுத்து, தான் உற்பத்தி செய்த பொருட்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அமெரிக்கா, ஜப்பானுடன், தனது முதற்கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் பேச்சுவார்த்தையில், வேளாண் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி, வாகன ஏற்றுமதி, சேவைத் துறைகள் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்படுகின்றன.