அமெரிக்காவை எச்சரிக்கவே ஏவுகணை சோதனை – கிம் ஜாங் அன்
புதிய ஏவுகணைகள் சோதனை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை வடகொரியா அதிபர் என கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதை எச்சரிக்கும் விதமாக வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கியது.
9 நாட்களுக்குள் அந்நாடு 3 முறை ஏவுகணை சோதனை நடத்தி அதிரவைத்தது. எனினும் வடகொரியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கடந்த திங்கட்கிழமை கூட்டுப்பயிற்சியை தொடங்கின.
இது வடகொரியாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் 2 புதிய ரக ஏவுகணைகளை ஏவி சோதித்து பார்த்தது. தெற்கு மாகாணமான வாங்கோவில் அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் அன் மேற்பார்வையில் இந்த ஏவுகணை சோதனை நடந்தது.
இதுகுறித்து கிம் ஜாங் அன் கூறுகையில், “தற்போது நடத்தப்பட்ட புதிய ஏவுகணைகள் சோதனை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை ஆகும்” என கூறினார்.