அமெரிக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவு வழங்கும் அம்மா கிச்சன்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை புரட்டிப் போட்ட இர்மா புயல் கரைகடந்தபோதும் மழையின் பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீண்டு வரவில்லை. அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக புயல், கனமழை காரணமாக புளோரிடாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் 3 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழக உணவு விடுதியான அம்மா கிச்சன், இர்மா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது. ஒரத்தநாட்டைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் இந்த உணவகத்தை நடத்தி வருகிறர்.

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்புத் திட்டமான அம்மா உணவகத்தை பின்பற்றி அமெரிக்காவிலும் ‘அம்மாஸ் கிச்சன்’ என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் தினேஷ்குமார். ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து முடித்துள்ள இவர், அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்காக இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம் போன்றே, குறைந்த விலையில் உணவு வழங்கப்படுவதால், இந்த அம்மாஸ் கிச்சனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

நியூஜெர்சி, ஃப்ளாரிடா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் செயல்படும் இந்த அம்மாஸ் கிச்சனில் இட்லி, வடை உள்ளிட்டவை ஒரு டாலருக்கும், பிரியாணி 7 டாலருக்கும் விற்கப்படுகிறது. உள்ளூர் விவசாயிகளுடன் இணைந்து இயற்கை முறையிலான உணவுகளை வழங்கி வருகிறார் தினேஷ்குமார்.

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான தினேஷ் குமார், ஜெயலலிதாவின் திட்டங்களில் தனக்குப் பிடித்தமானது என்பதால் இந்த அம்மாஸ் கிச்சனை தொடங்கியதாக கூறுகிறார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !