அமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் நாயை மீட்க போனவர் பலி

அமெரிக்காவின் மேய்ன் மாகாணம் ஓர்லண்ட் நகரை சேர்ந்தவர் சாம் கிராபோர்ட் (வயது 40). இவர் அங்குள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். சாம் கிராபோர்ட், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். அந்த நாய் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் வீடு முழுவதும் தீ பரவிவிட்டதால், சாம் கிராபோர்ட் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்தார். அவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

இதை எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்ட சாம் கிராபோர்ட், தனது பாசத்துக்குரிய நாய் தன்னுடன் இல்லை என்பதை உணர்ந்து பதறிப்போனார்.

உடனே அவர் நாயை தேடி பற்றி எரியும் வீட்டுக்குள் சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் உள்ளே சிக்கிக்கொண்டார். தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்த பிறகு, கரிக்கட்டையான நிலையில் சாம் கிராபோர்ட் உடல் மீட்கப்பட்டது. அதே சமயம் அந்த நாயின் உடல் கிடைக்கவில்லை. நாயின் கதி என்ன? என்பது தெரியவில்லை.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !