அமெரிக்காவின் தலையீட்டுக்கு சவுதி அரேபியா கண்டனம்!

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலைக்கு சவுதி இளவரசரே பொறுப்பு எனும் அமெரிக்க செனட்டின் தீர்மானத்திற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் யெமனில் போரில் ஈடுபட்டுள்ள சவுதி தலைமையிலான கூட்டணிப்படைகளுக்கு வழங்கிவரும் ராணுவ உதவிகளை நிறுத்துவதற்கும் அமெரிக்க செனட்டில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட இத்தீர்மானம் பொய்யான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமது பிராந்திய மற்றும் சர்வதேச பங்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சு விமர்சித்துள்ளது.

ஒக்டோபர் மாதம் இஸ்தான்புல் சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் படுகொலையில் இளவரசர் மொஹம்மட் பின் சல்மானின் ஈடுபாட்டை சவுதி அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது.

சவுதி அரேபியா ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை வருத்தத்திற்கு உரியது எனவும் , இந்தப் படுகொலை சவுதி மற்றும் அதன் அமைப்புகளின் கொள்கையை பிரதிபலிக்கவில்லை எனவும் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜமால் கஷோக்கி கொலை வழக்கில் விசாரணை நியாயமாக நடத்தப்படுவதற்கு சவுதி குறுக்கிடுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !