அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் டிரம்பிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் சனிக்கிழமை பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
டிரம்ப் நாட்டை நிர்வகிக்கும் முறை குறித்து சீற்றமடைந்துள்ள மக்களே இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் இவை என கார்டியன் தெரிவித்துள்ளது.
தலையிடவேண்டாம் என்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள கார்டியன் 1200 இடங்களில் டிரம்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன சிவில் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட குழுக்கள் இதில் கலந்துகொண்டன என தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவது,சமூக பாதுகாப்பு நிர்வாக அலுவலகங்களை மூடுவது,குடியேற்றவாசிகளை நாடுகடத்துவது,திருநங்கைகளிற்கான பாதுகாப்பை அகற்றுவது,சுகாதார பாதுகாப்பு திட்டங்களை குறைப்பதுபோன்ற டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சீற்றம் வெளியிட்டுள்ளனர்.
வோசிங்டனிலும் புளோரிடாவிலும் சுமார் 500,00 மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு விதமான பதாகைகளையும், உக்ரைனின் கொடியையும் ஏந்தியிருந்தனர் என தெரிவித்துள்ள கார்டியன், உக்ரைன் மீது போர் தொடுத்த ரஸ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கு டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே உக்ரைன் கொடிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர் என தெரிவித்துள்ளது.
தாங்களுடைய இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏனையவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உந்துதலை வெளிப்படுத்தும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களை எழுச்சியடைய செய்வதே இதன் நோக்கம் என 63 வயது டயனே கொலிபிராத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தன்னை எதிர்ப்பவர்களிற்கு எதிராக ஆக்ரோசமாகவும்,வன்முறைபோக்குடனும் நடந்துகொண்டுள்ளதால் பலர் தங்கள் எதிர்ப்புகளை வெளியிட தயங்குகின்றனர் என தெரிவித்துள்ள டயனே கொலிபிராத் நாங்கள் டிரம்பிற்கு எதிராக குரல்கொடுக்கின்றோம் என்பதை மௌனமாக உள்ள அமெரிக்கர்கள் பார்க்கவேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டங்களின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
எங்கள் துணிச்சலை அவர்கள் பார்க்கும்போது டிரம்பை எதிர்ப்பதற்கு அவர்களும் துணிவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த மூவ்ஒன் அமைப்பினை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் முன்னால் மண்டியிட தயாராகவுள்ள மக்களிற்கும் ஸ்தாபனங்களிற்கும் அதனை எதிர்ப்பதற்கான மக்கள் இயக்கம் உள்ளது என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகின்றோம் என ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நமது அரசியல் தலைவர்களிற்கு டிரம்பின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான துணிச்சல் உள்ளது என்றால் அவர்கள் அதற்கு தயாராகயிருந்தால்,நாங்கள் அவர்களின் பின்னால் நிற்போம்,என தெரிவித்துள்ள அவர் அரசியல் தலைவர்கள் ஜனநாயகத்தினை பாதுகாக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பகிரவும்...