அமெரிக்காவின் அச்சுறுத்தும் குடியேற்றக் கொள்கை: 8 வயது சிறுவன் மரணம்!

அமெரிக்காவில் குடியேறும் நோக்கில் பெற்றோருடன் அமெரிக்க எல்லையை கடக்க முற்பட்ட 8 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளார்

குவாத்தமாலாவைச் சேர்ந்த பெஃலிப்பே அலொன்சோ கோம்ஸ் என்ற சிறுவன், தனது பெற்றோருடன் அமெரிக்காவிற்குள் குடியேற முயற்சித்தபோது எல்லைப் பாதுகாப்பு படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்க – மெக்சிக்கோ எல்லையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த சிறுவன், நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) மரணமாகியுள்ளார்.

அமெரிக்க – மெக்சிக்கோ எல்லையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குடியேற்றவாசிகளில், கடந்த வாரம் 7 வயதான சிறுமியொருவர் காலமானார். அவரது இறுதிக்கிரியை நேற்று இடம்பெற்றது. இந்நிலையில், மற்றுமொரு மரணம் சம்பவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுவன் கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்ததாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படையினர் குறிப்பிடுகின்றனர். எனினும், தடுப்பிலுள்ளவர்கள் உரிய முறையில் கண்காணிக்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ஜோகுயின் காஸ்ரோ, குடியேற்றவாசிகள் மனித நேயத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்கி அவர்களுடைய பாதுகாப்பை உறுப்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதனைவிடுத்து குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்புவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கை, குடியேற்றவாசிகளை குறிப்பாக குழந்தைகளை ஆபத்தில் தள்ளும் செயற்பாடென கூறியுள்ளார்.

குவாத்தமாலா, ஹொண்டுராஸ் மற்றும் எல் சல்வடோர் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் மெக்சிக்கோ ஊடாக அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்டு வருகின்றனர். தமது நாட்டில் காணப்படும் வறுமை மற்றும் வன்முறையால் தாம் வெளியேறி வருவதாக அந்நாட்டு மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், சட்டரீதியான அங்கீகாரமின்றி குடியேற்வாசிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க – மெக்சிக்கோ எல்லையை கடக்க முற்பட்ட குடியேற்றவாசிகள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை தாக்குதலை நடத்தினர். குடியேற்றவாசிகள் மீது கற்களை வீசியெறிந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இவ்விடயம் ட்ரம்ப் நிர்வாகத்தை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளதோடு, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென மெக்சிக்கோ வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !